தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் அதிகமான தொண்டர்கள் கூடிய அரசியல் மாநாடு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு தான் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த நகர்வுக்கு விஜய் தயாராகி வருகிறார். விக்கிரவாண்டி, மதுரையை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அடுத்த மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. இது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதிமுகவுக்கும், கொங்கு வை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
