தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் இந்த முறை அதிமுக ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதனிடையே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இபிஎஸ்ஐ விமர்சித்துள்ளார்.
அதில், திருப்பூருக்கு அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து தற்போது நிறைவேற்றியது திராவிட மாடல் ஆட்சி தான். இந்தப் பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டல தலைவர் போல எடப்பாடி பழனிச்சாமி காட்டிக் கொள்கிறார். எந்த தைரியத்தில் பிரச்சாரம் தொடங்கினார் என்று தெரியவில்லை. அவருடைய தோல்வி இங்கிருந்துதான் தொடங்கப் போகுது.
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அடிமேல் அடி வாங்குகின்றார். விரத்தியின் விளிம்பில் பேசிக்கொண்டு என்னை ஒருமையில் பேசி வருகிறார். ஏதோ தன்னை எம்ஜிஆர் போலவும் ஜெயலலிதா போலவும் காட்டிக் கொள்கின்றார். அவருடைய வண்டி விரைவில் கழண்டு விடும். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
