தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வந்தது.. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என திமுகவால் சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் கிடையாது. அது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது.
பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பைக் காட்டியவர்கள் திமுக. ஜெயலலிதா திருச்சி தொகுதியில் தலித் எழில் மலையை நிறுத்தி வெற்றி பெற செய்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தன பாலை சபாநாயகர் ஆக்கினார், உணவுத்துறை அமைச்சராக்கினார். இதுதானே மாறுதல். இதைக் கூட திமுக செய்யவில்லை. திமுகவிடமிருந்து ஒரு பொது தொகுதியை கேட்டு பெற திருமாவளவன் என்ன பாடு படுகிறார். பொது குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்க கூடாது என்பது போல பொது தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என திமுக சொன்னது பதிவாகியுள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்.
