செப். 1 முதல் போஸ்ட் ஆபிஸில் இந்த சேவை கிடையாது… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Srimathi on ஆவணி 9, 2025

Spread the love

50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவையை நிறுத்த போவதாக தபால் துறை முடிவு எடுத்துள்ளது. இந்த சேவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படாது. மேலும் ஸ்பீடு போஸ்ட் சேவையுடன், பதிவு தபால் சேவை இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இம்முயற்சியால் தபால் துறையின் செயல்பாடு எளிமையாகவும் நவீனமாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. ஸ்பீடு போஸ்ட் விலை அதிகமாக உள்ள நிலையில், பதிவு தபால் சேவை விலை குறைவாக இருந்தது. இச்செயல்பாட்டால் சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் பாதிக்கப்படலாம். ஏனெனில் அவர்கள் மலிவான தபால் சேவையையே நம்பியே இருக்கின்றனர்.

தனியார் கொரியர் சேவைகள் வந்ததாலும், டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்ததாலும், பதிவு தபால் பயன்பாடு குறைந்து விட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பதிவு தபால் மற்றும் ஸ்பீட் போஸ்ட் இணைப்பதற்கான உத்தரவை செயலாளர் மற்றும் பொது தபால் இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளனர். அனைத்து துறைகள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் இந்த மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த இணைப்பின் மூலம் ஸ்பீட் போஸ்ட் சேவையின் தரம் உயர்த்தப்பட்டு, விரைவாக டெலிவரி செய்ய இயலும். பார்சல்களை எளிதாக கண்காணித்து, வேலைகளை சுலபமாக முடிக்கலாம்.

   

ஸ்பீட் போஸ்ட் சேவை 1986 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. 2011-12 ஆண்டில் 244.4 மில்லியன் பதிவு தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் அது 184.6 மில்லியன் ஆக குறைந்து 25% வீழ்ச்சி அளித்துள்ளது. இப்பொழுது பொதுமக்கள், டிஜிட்டல் முறையையும், தனியார் கூரியர் சேவைகளும் பயன்படுத்தி வருவதால், பதிவு தபாலின் சேவை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. ஸ்பீட் போஸ்ட் சேவையில் பார்சலை கண்காணித்து டெலிவரி ஆனவுடன் தகவல் தெரிவிக்கப்படும். ஆனாலும் பதிவு தபால் சேவையை நிறுத்துவது வயதானவர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தும். ஏனெனில் பதிவு தபால் என்பது நம்பகமான சேவையாக அறியப்படுகிறது.

   

பதிவு தபால் சேவை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கபட்டது. ஏனெனில் இதன் கட்டணம் மிகக் குறைவு, பாதுகாப்பானதும் கூட. இது வங்கிகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பாதுகாப்பதாக அனுப்ப பயன்படுத்தப்பட்டது. பதிவு தபால் மூலம் அனுப்பியதற்கான ஆதாரமும், டெலிவரி செய்ததற்கான ஆதாரமும், நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். பதிவு தபால் சேவையை நிறுத்துவது, இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் பல மாற்றங்களை கொண்டு வரும் என கருதப்படுகிறது. காலத்திற்கேற்ற மாற்றம் முக்கியம் தான், அதே நிலையில் பழைய சேவைகளை மறக்கக்கூடாது என்கிறார்கள் இச்சேவையை விரும்புபவர்கள்.