ஆடிப்பெருக்கு என்பது காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாகும். இந்த நாளில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக இருக்கும். ஆடிப்பெருக்கு நாளான இன்று முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும்போதும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு பிறகு பூஜையை தொடங்குவது வெற்றியை தரும்.
பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பிறகு அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும். ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும். எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும் கயிறு அணிந்து இருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறு ஆவது இருப்பது நல்லது. அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். புதிதாக சரடு அணிபவர்களும் இந்த நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம். விசாக நட்சத்திரமானது காலை 7.24 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.50 மணி வரை உள்ளது. தாலி மாற்றுவதற்கான ஏற்ற நேரமாக காலை 7:45 முதல் 8:45 மணி வரையும், மாலை 3:15 முதல் 4 15 வரையும் உள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று காலை 9 மணிக்குள் வழிபாடு முடித்து புதுமண தம்பதிகள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் குறையாமல் இருக்க வேண்டிய அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வாங்கி நிரப்பி வைக்க மறக்க வேண்டாம். இறுதியாக ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் குண்டு மஞ்சள். நம்மால் நகைகளை வாங்க முடியவில்லை என்றாலும் குண்டு மஞ்சளை வாங்கி வைப்பது அதற்கு இணையான பலனை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
