பொதுவாக மக்கள் பல்வேறு தெய்வங்களுக்கு பல்வேறு விதமாக விரதம் மேற்கொள்வார்கள். அதாவது ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கும், திங்கட்கிழமை சிவபெருமானுக்கும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை நவகிரக வழிபாடும், வெள்ளிக்கிழமை அம்மனுக்கும், சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவகிரகங்களுக்கும் விரதம் இருப்பார்கள்.
பலரும் பல்வேறு விதமாக விரதம் இருப்பவர்கள். சிலர் நீராகாரம் மட்டும் அருந்துவார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் முழுவதும் நீராகாரம் கூட அருந்தாமல் இருப்பார்கள். இவை அனைத்தும் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலை பொறுத்தே அமைகிறது. அவ்வாறு விரதம் இருக்கும் போது கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடுவதா வேண்டாமா என்ற குழப்பம் பெரும்பாலும் இருந்து வருகிறது.
விரதம் இருக்கும் போது எந்த தெய்வத்தை நினைத்த நாம் விரதம் இருக்கிறோமோ அன்றைய நாள் அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வணங்குவது வழக்கமாக இருக்கும். அவ்வாறு சென்ற போது அங்கு பிரசாதம் கொடுத்தால் வாங்கி சாப்பிடலாம் அதில் ஒன்றும் தவறில்லை. சிறிது அளவு தான் இருக்கும். அதனால் விரதம் கெட்டு விடாது. சில சமயம் நாம் கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிரசாதம் கொண்டு வந்து தரும்போது அதை தயங்காமல் வாங்கி சாப்பிடலாம். கோவிலுக்கு சென்றால் பிரசாதம் கிடைக்கும் என்று எண்ணத்தை வைத்துக் கொண்டு சென்று இரண்டு அல்லது மூன்று முறை வாங்கி சாப்பிடுவது தவறு.
