மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோனாவாலாவில் 23 வயது பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் படி அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஒரு கார் அருகில் நின்றுள்ளது. அதிலிருந்த நபர் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துச் சென்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கார் நகர்ந்து கொண்டிருக்கும்போது தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு சனிக்கிழமை அதிகாலை சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டதாக அந்த பாதிக்கப்பட்ட இளம் பெண் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அந்த பெண் முதலில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக காரில் பலாத்காரம் செய்ததாக கூறி இருந்த நிலையில் காவல்துறை விசாரணையில் காருக்குள் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதும் தெரிய வந்த நிலையில் இந்த வழக்கில் 35 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
