ராஜஸ்தான் மாநிலம் ஜலகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள் . இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பள்ளிகளில் மாணவர்களுடைய பாதுகாப்பும் மற்றும் நலனை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு விதிகளின்படி குழந்தைகள் தொடர்பான வசதிகளுக்கு கட்டாய பாதுகாப்பு நடவடிக்கை, அவசர கால தயார் நிலைக்கான பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி, மனநல ஆதரவு வழங்குதல் போன்றவை இதில் அடங்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு கொண்ட அபாயகரமான சூழ்நிலை சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதற்குரிய நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் அலட்சியத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு பாதுகாப்பு தணிக்கை நடவடிக்கைகளை தாமதம் இல்லாமல் செயல்படுத்துமாறு கல்வித்துறை கல்வி வாரியம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
