கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ரிதுபர்ணா(20) என்ற மாணவி மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சாயத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபோடிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதியாண்டு பயின்று வருகின்றார். இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 72.2 இலட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் யூடி காதர் சாயத்ரி கல்லூரிக்குச் சென்று மாணவிக்கு மைசூர் தலைப்பாகை, சால்வை, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். இது தொடர்பாக மாணவி கூறுகையில், எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுதான் இருந்தது.
இதற்காக பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் என்னுடைய கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். என்னுடைய பெற்றோர்களும் நண்பர்களும் என்னை தேற்றி பொறியியல் படிக்குமாறு கூறினார்கள். இதனால் சாயத்ரி கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன்.
என்னுடைய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் ஒருங்கிணைந்து அனைத்து விதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன். தற்போது எனக்கு படிப்பை முடிக்கும் முன்பே 72 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று மாணவி தெரிவித்துள்ளார். 20 வயதிலேயே இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய மாணவிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
