மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படும் என்று சமூக வலைதள பக்கத்தில் செய்தி ஒன்று பரவி வரும் நிலையில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளது. youtube சேனல் ஒன்றில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் 500 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்று கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நிலையில் உண்மை சரிபார்ப்பு துறை இந்த வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது குறித்து எந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடி ஆகும் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை தான் இந்த வதந்திக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அந்த சுற்றறிக்கையில் 100 மற்றும் 200 நோட்டுகளின் புழக்கத்தை ஏடிஎம்கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
