தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தோல்வியை தழுவுவதும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் வெற்றி பெறுவதும் என்பதும் சகஜம் ஆகிவிட்டது. கடந்த வருடத்தில் பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் அதிக வசூலை வாரி குவித்தது. அவ்வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

GOAT:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 470 கோடி வரை வசூலை குவித்தது. கடந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

அமரன்:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவான திரைப்படம் தான் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் உலக அளவில் சுமார் 300 முதல் 335 கோடி வரை வசூலை குவித்தது.

வேட்டையன்:
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ரானா ரகுபதி, மஞ்சு வாரியார் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 240 முதல் 255 கோடி வரை வசூல் செய்திருந்தது.

மகாராஜா:
கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் மகாராஜா. நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த நிலையில் படம் உலக அளவில் சுமார் 170 முதல் 200 கோடி வரை வசூல் செய்திருந்தது.

ராயன்:
தனுஷ் இயக்கிய நடித்திருந்த திரைப்படம் தான் ராயன். இந்த படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 160 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்தியன் 2:
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் உலக அளவில் 151 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அரண்மனை 4:
இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்த திரைப்படம் தான் அரண்மனை 4. இந்த படம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருந்த நிலையில் தமன்னா மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 101 கோடி வரை வசூல் செய்திருந்தது.
