வீர தீர சூரன் படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்னதான் பிரச்சனை?

By vinoth on பங்குனி 27, 2025

Spread the love

விக்ரம் நடிப்பில்  உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தை பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சித்தா ஆகிய படங்களின் இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ளார். எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக இந்த படம் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டுக் காட்டியது.

இன்று இந்த படம் ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென நேற்றிரவு டெல்லி நீதிமன்றம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இன்று காலை 10.30 மணி வரை இடைக்கால தடை விதித்தது. இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம். வீர தீர சூரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் விக்ரம்மை வைத்து ஏற்கனவே இருமுகன் மற்றும் சாமி 2 ஆகிய படங்களைத் தயாரித்தவர். இந்த இரு படங்களும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தைக் கொடுத்த படங்கள்.

   

அது மட்டுமில்லாமல் ஷிபு தயாரித்த சில மலையாளப் படங்களும் நஷ்டமடைய அவர் பொருளாதார ரீதியில் நசிவடைந்தார். இதன் காரணமாக வீர தீர சூரன் படத் தயாரிப்புக்காக ‘B4U’ என்ற வட இந்திய நிறுவனம் ஒன்றிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அந்த நிறுவனம் தந்த பணத்துக்காக படத்தின் டிஜிட்டல் உரிமையை அந்த நிறுவனத்துக் கொடுத்துள்ளார்.

   

 

ஆனால் தற்போது டிஜிட்டல் மார்க்கெட் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அந்நிறுவனத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் தொகைக்குப் படத்தை விற்க முடியவில்லை. இந்நிலையில் அதற்குள்ளாகவே தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது வரை அந்நிறுவனத்தால் டிஜிட்டல் உரிமையை விற்க முடியவில்லையாம்.

இதையடுத்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில்தான் தற்போது நீதிமன்றம் வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்று காலை விசாரணை நடந்த பின்னர் ரிலீஸ் பற்றிய விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.