தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவும், அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே கருத்தைதான் எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி மேல் ஒரு குற்றச்சாட்டாக வைத்தனர்.

சிவாஜிக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட மேலும் சிலர் நடிகர்களாகி உள்ளனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் வீ சேகர் தன்னுடைய மகன் பிரபுவின் நடிப்புப் பற்றி சிவாஜி ஜாலியாக சொன்னதைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “ஒருமுறை நான் பிரபுவோடு படம் பண்ணுவதாக இருந்தது. அப்போது பிரபு என்னை அவர் வீட்டு விருந்துக்கு அழைத்தார். நான் போனபோது சிவாஜி சாரை பார்த்து விஷயத்தை சொல்லி ஆசிர்வாதம் வாங்கினேன்.
அவர் என்னிடம் “பிரபுவா? அவன் சுமாராகதான் நடிப்பான். ஆனா நான் நல்லா நடிப்பேன்” என்றார். பின்னர் “பிரபு ஓரளவு நடிப்பான். நடிக்குற மாதிரி நடிப்பான்” என்றல்லாம் கலாய்த்தார்” எனக் கூறியுள்ளார்.
