வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுசீந்திரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதன்படி இவர் சிம்புவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்புவுக்கு இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து பாயும் புலி, வில் அம்பு, கென்னடி கிளப் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் இறுதியாக டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் வாழ்க்கையில் சந்தித்த கடினமான நாட்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ரொம்ப கஷ்டப்பட்டேன். நிறைய கல்யாண மண்டபத்திற்கு சென்று சப்ளையரா வேலை பார்த்து இருக்கேன். மாசத்துக்கு 4 நாட்கள் சென்று வேலை பார்ப்பேன். 25 ரூபா வர சம்பளம் தருவாங்க. மாசத்துக்கு 600 ரூபாய் சம்பாரிச்சா அதுல 300 ரூபா வாடகை கட்டிட்டு மீதமுள்ள 300 ரூபாய்ல தான் சாப்பாட்டு செலவு பார்த்துகிட்டு எல்லாத்தையும் சமாளிச்சுக்கணும். ஒரு மூணு வருஷம் அப்படியே போச்சு. அதுக்கப்புறம் நான் உதவி இயக்குனர் ஆகிவிட்டேன். அதன் பிறகு எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

அவங்க தான் எனக்கு ஒவ்வொரு முறையும் உதவி பண்ணாங்க. இங்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் நாளை என்பது கடந்து போய்கிட்டு தான் இருக்கும். நாளை என்ன பண்ணப் போறோம் என்று நாம் யோசிப்போம். நாம் எது பண்ணாலும் பண்ணாவிட்டாலும் அந்த நாளை கடந்து போக தான் செய்யும். சந்தோசம் மற்றும் துக்கம் என எல்லாமே கலந்ததாக தான் என்னுடைய வாழ்க்கை இருந்தது. எல்லா துன்பங்களையும் கடந்து தான் நானும் இந்த இடத்திற்கு வந்தேன் என்று சுசீந்திரன் எமோஷனலாக பேசியுள்ளார்.
