தமிழ் சினிமாவில் “சந்தியா சந்தியா, சம்மதம் சொல்வாயா” என்ற பாடல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்தான் நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 39 வயதான சிரஞ்சீவி சர்ஜாவின் உயிரிழப்பு கன்னட திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் உயிரிழந்த போது மேக்னாராஜ் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிறகு இவருக்கு அடுத்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய கணவரின் துயரத்தில் ஆழ்ந்திருந்த மேக்னா தன்னுடைய மகனை பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றார். தன் கணவரை இழந்து வாழும் மேக்னா குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலர் கூறியும் தெளிவான முடிவில் இருந்த நிலையில் மகனுடன் தனிமையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதுவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த மேக்னா கணவர் மறைந்த பிறகு குழந்தைக்காக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவருடைய மகனுக்கு நான்கு வயதாகி விட்டதால் மீண்டும் சினிமாவில் என்டரியாக உள்ளார். அதாவது எட்டு வருடங்களுக்குப் பிறகு சுரேஷ்கோபி நடிக்கும் மலையாள திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
