நான் இயக்கிய படத்தில் எனக்கே தெரியாமல் பாடலுக்கான சூழ்நிலையைக் கண்டுபிடித்த இளையராஜா… வியந்து பேசிய கமல்!

By vinoth on மாசி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜாவை தமிழ் சினிமாவில் அதிகம் ஆராதித்தவர்களில் ஒருவர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களில் இளையராஜா இசையமைத்துள்ளார். இருவரும் இணைந்து முத்திரைப் பதித்த படங்களில் ஒன்று ஹேராம்.

   

ஹேராம் படத்துக்கு முதலில் வேறொரு இசையமைப்பாளர்தான் பணியாற்றுவதாக இருந்தாராம். ஆனால் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கமல், இளையராஜாவிடம் சென்றுள்ளார். அதுபற்றி பேசிய கமல் “நான் ஹேராம் படத்துக்கு முதலில் வேறொரு இசையமைப்பாளரைதான் நியமித்திருந்தேன். பாடல்களுக்காக நிறைய செலவு செய்து படமாக்கியிருந்தோம். ஆனால் திடீரென அந்த இசையமைப்பாளர்  வெளியேறியதால் மீண்டும் இளையராஜாவிடம் சென்றேன்.

 

அவர் நீங்க எடுத்தக் காட்சிகளை வைத்தே நான் இசையமைத்துத் தருகிறேன் என்றார். எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அவர் எந்த பயமும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அப்படி நாங்கள் எடுத்தக் காட்சிகளை வைத்து அவர் உருவாக்கியதுதான் ஹேராம் பாடல்கள். இதனால் எங்களுக்கு ஏற்பட இருந்த பெரிய செலவை அவர் இல்லாமல் ஆக்கினார்.

அதுமட்டுமில்லாமல் நான் புதிதாக ஒரு பாடலையும் போட்டுத் தருகிறேன் என்றார். நான் திரைக்கதையில் அதற்கு இடம் இல்லையே என்றேன். இருக்கு என்று சொல்லி அவர் போட்ட பாட்டுதான் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல்” என வியந்து பாராட்டியுள்ளார்.