வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் பல நடிகர்களில் ஒருவராகத் தோன்றியவர் சிங்கமுத்து. ஆனால் அவர் வடிவேலுவோடு இணைந்து நடிக்கும் காட்சிகளில் சிரிப்பு கூடுதலாக வெளிப்படும் வண்ணம் நடித்து கவனத்தை ஈர்ப்பார். அதுமட்டுமில்லாமல் வடிவேலுவோடு இணைந்து காமெடிக் காட்சிகளை மெருகேற்றுவதிலும் சிங்கமுத்து ஈடுபட்டு வந்துள்ளார். தன்னை விட சீனியரான சிங்கமுத்துவை வடிவேலு, அண்ணன் என்றுதான் அழைப்பாராம்.
இப்படி கூட்டத்தில் ஒரு நடிகராக இருந்த சிங்கமுத்துவை பிரபலமாக்கியது வடிவேலு அவர் மேல் தொடர்ந்த வழக்கு ஒன்றுதான். வடிவேலு நல்ல சம்பாதித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் பல இடங்களில் ப்ளாட்களை வாங்கி அது நல்ல விலையேறியதும் விற்றுக் காசாக்கியுள்ளார். அதற்கு சிங்கமுத்துவை ஆலோசனைகள் கேட்டும் நிலத்தை விலைபேசி வாங்குவதும் விற்பதும் போன்றவற்றை செய்ய சொல்லியுள்ளார்.
அப்படி நிலம் வாங்கி விற்றதில் சிங்கமுத்து தன்னை ஏமாற்றிவிட்டார் என வடிவேலு வழக்குத் தொடர கிளம்பியது சர்ச்சை. அதன் பின்னர் சிங்கமுத்து, வடிவேலுவைக் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இதனால் அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் சிங்கமுத்து அளித்த நேர்காணலில் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் தான் செய்து வந்த தொழில்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சென்னையில் அரிசிக் கடை வைத்திருந்தேன். அப்போது நிறைய சினிமாக் காரர்கள் என்னிடம் அரிசி வாங்கி செல்வார்கள். பலருக்குக் கடனாக எல்லாம் கொடுத்துள்ளேன். எனக்கு ஜோதிடம் பார்ப்பதும் தெரியும் என்பதால் நிறைய சினிமாக்காரர்கள் என்னிடம் ஜோதிடம் பார்க்க வருவார்கள்.
அப்போது ஒரு நாள் உதவி இயக்குனராக இருந்த சங்கரை நண்பர் அழைத்து வந்து ஜோசியம் பார்க்க சொன்னார். அப்போது ஷங்கர் சோகமாக இருந்தார். நான் அவரின் ஜாதகத்தைப் பார்த்து கூடிய விரைவில் நீங்கள் இயக்குனர் ஆகிவிடுவீர்கள் என சொல்லி அனுப்பினேன். கொஞ்ச நாளிலேயே அவர் ஜெண்டில் மேன் படத்தில் ஒப்பந்தம் ஆனார்” எனக் கூறியுள்ளார்.
