தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது விவேக் தான். தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக நமக்கு வழங்கி வந்தவர். இப்படி புகழ்மிக்க கலைஞரான விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் இறந்ததற்குப் பிறகு திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் விவேக் குறித்து பல சுவாரசியமான நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அப்துல் கலாமின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த விவேக் அந்த லட்சியம் நிறைவேறுவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார். விவேக் இருந்து மூன்று வருடங்கள் ஆகியும் இவரைப் பற்றிய நினைவுகள் ரசிகர்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. இந்த நிலையில் விவேக் மனைவி அருள்ச்செல்வி சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் முறையாக தங்களுடைய இரட்டை குழந்தைகள் குறித்து மனம் திறந்து உள்ளார். நடிகர் விவேக் அருள் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தது மட்டுமே அனைவரும் அறிந்தது.

ஆனால் இவர்களைத் தொடர்ந்து விவேக் மற்றும் அருள் செல்வி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவர்கள் குறித்து அருள்செல்வி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். விவேக்கின் மூத்த மகள் அம்ரிதா நந்தினி, இவர் ஒரு ஆர்டிடெக்காக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வனி, இவருக்கு தான் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. லா படித்துள்ள இவருடைய கணவர் அமேசான் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக பிறந்தவர்தான் பிரசன்னா. உடல் நலக்குறைவால் 2015 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இவருடைய மறைவுக்குப் பிறகு விவேக் மற்றும் அருள்செல்வி தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அவர்களின் பெயர் பிரசாந்தினி மற்றும் பிரார்த்தனா என்று அருள்செல்வி தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு பிறந்த இவர்களுக்கு தற்போது ஏழு வயது ஆகிறது. விவேக்குக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் தகவல் பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது அருள்செல்வியை ஏழு வருடங்களுக்குப் பிறகு அதனை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தங்களுடைய இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளதையும் அவர் கூறியுள்ளார்.

அதாவது ஒருமுறை காஞ்சிபுரம் அருகே இருந்த கோ சாலையை பார்வையிட விவேக் சென்ற போது அங்கிருந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் எவ்வளவு தூரம் என்று கேட்டுள்ளார். இங்கிருந்து 20 நிமிடம் மட்டுமே ஆகும் என அங்கிருந்தவர்கள் கூறியதால் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஆசைப்பட்டு மனைவி மற்றும் மகள்கள் கூறிய பெயர்களை எழுதி ஐயரிடம் கொடுத்து அம்மன் காலடியில் இவை அனைத்தையும் குலுக்கி போட்டு இரண்டு சுருள் மட்டும் எனக்கு கொடுங்கள் என்று விவேக் கூறிய நிலையில் அதேபோல் ஐயரும் செய்து இரண்டு சுருள் மட்டுமே விவேக்கிடம் கொடுத்துள்ளார். அதில் எழுதப்பட்டிருந்த பெயரை தான் தனது இரட்டை மகள்களுக்கும் வைத்துள்ளார்.
