சினிமாவை பொறுத்தவரையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். பல கோடி பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் தோல்வியை தழுவுவதும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதும் சினிமாவில் சகஜமான ஒன்று. ஆனால் ஒரு சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஓவர் பில்டப் கொடுத்து கடைசியில் அது தோல்வியை தழுவி விடுகிறது. இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல ஆச்சரியமும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருந்துள்ளது. இந்த வருடம் ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் படு தோல்வியை சந்தித்துள்ளன. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக பில்டப் கொடுத்து ரிலீஸ் ஆகி பிளாப் ஆனா திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லால் சலாம்:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த நிலையில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தார். இருந்தாலும் அவரது படமாகவே இது புரமோட் செய்யப்பட்டது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர்கள் கொடுத்த பில்டப் அளவுக்கு படம் இல்லாததால் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதில் பாதி அளவு கூட வசூலிக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம்.

இந்தியன் 2:
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படம் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக கருதப்பட்டதால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். இந்தியன் முதல் பாகம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தால் அதே அளவுக்கு இருக்கும் என்ற நினைப்பில் இந்தியன் 2 படம் பார்க்கச் சென்ற ரசிகர்களை கமல்ஹாசன் கதரவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு படம் இருந்ததால் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

கங்குவா:
இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் இது. ஏனென்றால் சுமார் இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாகுபலி மாதிரி இருக்கும் என்றெல்லாம் கூறினர். அதுமட்டுமல்லாமல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று சூர்யா சொல்ல படம் 2000 போடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருந்தார். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ரசிகர்களும் மிக எதிர்பார்ப்போடு இருந்த சமயத்தில் இந்த திரைப்படம் உப்பு சப்பு இல்லாத திரைக்கதையால் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதில் பாதியைக் கூட வசூல் செய்வதே சந்தேகமாக உள்ளது.

பிரதர்:
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இந்த வருடம் தொடக்கத்தில் சைரன் என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இந்த திரைப்படம் கமர்சியல் ஹிட் அடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆன வேகத்திலேயே தியேட்டரை விட்டு காணாமல் போய்விட்டது.
