தற்போது மழை மற்றும் குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மின்சாரத்தை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம். சிறிய கவனக்குறைவினால் பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். அதனால் இந்த மின்சார சாதனங்களை மின்சாரத்தை பயன்படுத்தும் போது என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

முதலில் உங்கள் வீட்டில் வீனாய் போய் உள்ள மிகவும் பழமையான சுவிட்சுகள் இருந்தால் உடனே அதை மாற்றி புதிய தரமான சுவிட்ச்களை வாங்கி பொருத்துங்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் கட்டாயம் இருக்க வேண்டும். செலவு பாராமல் இதையும் வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் ஏற்றும் மோட்டார் சுவிட்ச் வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஆகியவற்றிற்கு கீழே ரப்பர் மேட் போடுவது மிகவும் பாதுகாப்பானது.
இந்த மழை குளிர் காலத்தில் சுவிட்ச் போடும் போது உங்களது இடது கையை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு வலது கை சுட்டு விரலை மட்டும் வைத்து சுவிட்ச் போடுங்கள். ஏனென்றால் இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது. இது உங்களை பாதுகாப்பாக வைக்கும். வீட்டிற்கு வெளிப்புறமாக இருக்கும் சுவிட்சுகளும் பாத்ரூம் சுவிட்ச்களும் இந்த நேரத்தில் ஈரப்பதமாக இருக்கும். அதனால் பழைய டூத் பிரஸ் அல்லது கட்டை குச்சி போன்றவற்றை வைத்துக் கொண்டு அதை வைத்து சுவிட்ச் போடுவது பாதுகாப்பானது.
இந்த மழை குளிர் காலங்களில் அதிகமாக வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்துவார்கள். வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது கவனமாக இன்லெட் அவுட்லெட் பைப் அடைப்பு இல்லாமல் எல்லாம் சரியாக இயங்குகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் கரண்ட் பாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக கைக்குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களை பயன்படுத்தாதீர்கள். மேலும் குழந்தைகளுக்கு எட்டும்படியில் சுவிட்ச் பாக்ஸ் போன்றவற்றை வைக்காதீர்கள்.

இந்த மழை குளிர் காலங்களில் சுவரெல்லாம் ஈரப்பதத்தோடு சொத சொதவென்று நீர் ஊறி போய் இருக்கும். நீர் அதிகமாக வரக்கூடிய சுவிட்ச்களில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கும். ஈரம் மின்சாரத்திற்கு நண்பன். அதனால் இந்த காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தால் இதனால் வரக்கூடிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
