தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

tamil actor srikanth
எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடி வருகிறார்.
இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த சில தவறான முடிவுகளால் திரைவாழ்க்கை அதலபாதாளத்துக்கு சென்றது பற்றி பேசியுள்ளார். அதில் “என் தோல்விகளுக்கு என்னுடைய மேனேஜர்தான் காரணம். நான் அடிபட்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது மணிரத்னம் சார் எனக்குக் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டார். அது எனக்கே தெரியாது.
அதுபற்றிக் கேட்டதற்கு ‘கொடுக்க வேண்டிய சூழல் வந்தது’ என சொன்னார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நாங்கள் படம் பண்ண ஒப்பந்தம் பண்ணியிருந்தோம். அவர் எங்கள் படத்தில் நடித்துவிட்டுதான் மற்ற படத்துக்கு செல்லவேண்டும் என சொல்லி இருந்தார். அதைக் காரணம் காட்டி மணிரத்னத்திடம் வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துள்ளார். எனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் ஆஸ்கர் ரவி சாரிடம் போய் பேசியிருப்பேன். அதனால்தான் இனிமேல் சொந்தக்காரர்கள் பக்கத்தில் இருக்கக் கூடாது என அனைவரையும் விலக்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
