இந்தியாவில் சாதாரண பாமர மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி வேலைவாய்ப்பு தேடுவோருக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் பதிவு செய்ய நவம்பர் 10 கடைசி நாள் ஆகும். இதில் இளைஞர்களுக்கு நடைமுறை பயிற்சி மற்றும் மாதாந்திர உதவி தொகையும் கிடைக்கும். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இன்டர்ன்ஷிப் நேரத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை நடைமுறை பணி அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். இதில் 500 ரூபாய் நிறுவனமும் 4,500 அரசும் வழங்கும். இதனைத் தவிர இன்டர்ன்ஷிப்பில் ஏற்படும் இதர செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மானியமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புகள் நாட்டில் 745 மாவட்டங்களில் உள்ளன.

மேலும் இந்த திட்டம் மூலமாக பயிற்சியாளர்கள் பணியிடத்தில் பணியாற்றும் நடைமுறை அனுபவத்தை பெற முடியும். தங்களுடைய உதவித்தொகை மூலமாக செலவுகளை சமாளிக்கலாம். இந்த அனுபவம் அவர்களுடைய வேலைவாய்ப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் விண்ணப்பிக்க நீங்கள் முதலில் pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் உள்ள பதிவு விருப்பத்தை கிளிக் செய்து புதிதாக திறக்கும் பக்கத்தில் பதிவு விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு வேட்பாளர் தன்னுடைய விருப்பப்படி ஐந்து வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் தொழிலை முன்னேற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகின்றது. இதில் அவர்கள் பயிற்சி மற்றும் உதவி தொகையின் பலனை பெற முடியும்.
