தமிழ் சினிமாவில் தேசிய விருது வென்ற நடிகர்கள்.. ஒண்ணுகூட வாங்காத ரஜினி, விஜய், அஜித்..!

By Nanthini on ஐப்பசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமா வரலாற்றை பொருத்தவரை மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுதான். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த விருது விழாவில் பல்வேறு திரையுலகில் இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்வது மட்டுமல்லாமல் சிறந்த நடிகர் உட்பட இசையமைப்பாளர் வரை பல்வேறு பிரிவுகளில் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை அதிக தேசிய விருதுகள் வென்ற நடிகர்கள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

   

கமல்ஹாசன்:

   

தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அதிக முறை உலக நாயகன் கமல்ஹாசன் தான் பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமல்ஹாசன் இதுவரை மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மூன்றாம் பிறை படத்திற்காக முதல் முதலில் தேசிய விருது பெற்ற கமல்ஹாசன் அதன் பிறகு நாயகன் மற்றும் இந்தியனாகிய திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.

 

தனுஷ்:

கமல்ஹாசனுக்கு அடுத்ததாக அதிக முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய நடிகர் தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களுக்காக தனுஷ் தேசிய விருது பெற்றுள்ளார்.

இது தவிர புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1971 ஆம் ஆண்டு வெளியான ரிக்சாக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். அதனைப் போல பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்திற்காக விக்ரம் தேசிய விருது பெற்றார். காஞ்சிபுரம் படத்திற்காக பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இவர்களைத் தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க தகவல் என்னவென்றால் கோலிவுட்டின் ஜாம்பவான் நடிகர்களாக கருதப்படும் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினி ஆகியோர் இதுவரை ஒரு முறை கூட தேசிய விருதை பெற்றதில்லை. இதில் சிவாஜிக்கு தேவர்மகன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட போதும் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார்.

அதனைப் போலவே தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கும் தேசிய விருது என்பது இதுவரை எட்டாம் கனியாக தான் உள்ளது. டோலிவுட்டில் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது ஒரே ஒரு நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் மட்டும்தான். புஷ்பா படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.