தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். மற்ற நாட்களில் ரிலீஸ் ஆகும் படங்களை விட தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம். சினிமா ரசிகர்கள் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்காக காத்திருப்பது வழக்கம். இந்த வருடம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் படப்பிடிப்புகள் நிறைவடையாமல் இருப்பதால் பொங்கலுக்கு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ளதால் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் மூன்று முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்தான் தீபாவளியை குறிவைத்து களமிறங்க உள்ளன.

அமரன்:
இந்த வருடம் தீபாவளியை குறிவைத்து அமரன் திரைப்படம் களமிறங்க உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

பிரதர்:
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி அன்று களமிறங்க உள்ள மற்றொரு திரைப்படம் தான் ஜெயம் ரவியின் பிரதர். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை களத்துடன் கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

பிளெடி பெக்கர்:
சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி இருவருமே திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இளம் நடிகர் கவின் நடித்துள்ள பிளெடி பெக்கர் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கவின் ஒரு பிச்சைக்காரர் போல் நடித்துள்ளார்.
