தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “நான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்றொரு படத்தில் நடித்தேன். அதில் நடிக்கும் போதே என் காமெடிக் காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இயக்குனர் அதைக் கேட்கவில்லை. படம் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. அப்போது எல்லோரும் கருணாஸுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஒரு படத்துக்கு ஹீரோ, ஹீரோயின், வில்லனுக்கு அடுத்தபடியாக காமெடியன்தான் முக்கியமானவன் என்று. ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கே எனக்குப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு படத்தில் ஒரு காட்சி என்றாலும் அது நன்றாக இருந்தால் மட்டுமே, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது ரசிகர்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்றால் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
