இனிமேல் நடிகர்களுக்கு சிகரெட் கொடுக்கமாட்டோம்… தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு – தன் ஸ்டைலில் பழிவாங்கிய நாகேஷ்!

By vinoth on ஆவணி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

   

இப்படிப்பட்ட சூழலில் ஒருமுறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் நடிகர்களுக்கு இனிமேல் சிகரெட் எல்லாம் கொடுக்க முடியாது என்ற முடிவை எடுத்துள்ளார்கள். அதை அனைத்து நடிகர்களுக்கும் சொல்லியுள்ளனர். அதே போல நாகேஷுக்கும் சொல்லியுள்ளனர். அதைக் கேட்டு நாகேஷ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாராம்.

   

இந்நிலையில் ஷூட்டிங் நடக்கையில் திடீரென நாகேஷ் காணாமல் போய்விட்டாராம். எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். ஒருமணிநேரம் கழித்து ரிலாக்ஸாக வந்தாராம். அவரிடம் எங்கே போனீர்கள் என்று கேட்டதற்கு அனைவரும் ஷாக் ஆகும்படி ஒரு பதிலை சொல்லியுள்ளார்.

 

அவர் “சிகரெட் வாங்க கடைக்குச் சென்றேன். டாக்சி பிடித்து சென்றேன். அதன் பின் டாக்‌ஸிக்குக் கொடுக்க காசு காசு இல்லை என்பதால் வீட்டில் போய் எடுத்துக் கொடுத்து விட்டு வந்தேன்” என்று கூறியிருக்கிறார். இவர் சொன்னதை கேட்டு அதிர்ந்த அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சென்று இதை அப்படியே சொல்லியுள்ளார்.

ஒரு சிகரெட் பாக்கெட்டுக்கு கஞ்சத்தணம் பார்த்து ஷூட்டிங் நேரத்தில் ஒருமணிநேரம் வீணாகிறதே என்று வருந்தி யார் கேட்டாலும் சிகரெட் கொடுத்து விடுங்கள் என சொல்லியுள்ளார்கள்.