நூறாண்டு கால தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் அவர் இசையில் வெளியான விடுதலை மற்றும் மெட்ராஸ் லவ் ஆகிய படைப்புகள் இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களையும் இளையராஜா பக்கம் இழுத்து வந்துள்ளது. இந்த ஆல்பங்களின் ஹிட்டால் இன்றைய இளைஞர்கள் பலர் இளையராஜாவை தங்களுடைய படங்களுக்கு இசையமைக்க வைக்க விரும்புகின்றனர்.
இதில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவர் இயக்கி மற்றும் தயாரித்த மெட்ராஸ் லவ் ஆந்தாலஜியின் 5 கதைகளுக்கு இளையராஜா இசையமைத்தார். அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய தியாகராஜன் குமாரராஜா “ நான் பார்த்த மிகவும் அறிவாளிகளில் ஒருவர் இளையராஜா. அவரின் மூளை இந்த வயதிலும் மிகவும் கூர்மையாக இயங்குகிறது.
இன்னும் ஒரு 100 வருடம் கழித்து தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருக்கும் ஆளுமைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டே வந்து ஒரே ஒருத்தரைதான் சொல்லவேண்டும் என்றால் அது இளையராஜாவாகதான் இருப்பார். “ என சிலாகித்துப் பேசியுள்ளார்.
அவரின் இந்த கருத்து உண்மையானதுதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து அந்த வீடியோத் துணுக்கை பகிர்ந்து வருகின்றனர்.
