தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த அவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி அதன் பிறகு 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னத்தி ஏராக இருந்தார்.
சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும், 100கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
அறிமுக காலத்தில் பிரபுவோடு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்து சிவாஜி கணேசன் அவரை மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தினார். அதன் பின்னர் பிரபு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி, கமல், விஜயகாணந்த், சத்யராஜுக்கு அடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இவர் நடிப்பில் வசூல் சாதனை செய்த படம் என்றால் அது பி வாசு இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான சின்னத்தம்பி திரைப்படம்தான். இந்த படத்தில் அப்பாவி இளைஞராக பிரபு நடிக்க, அவருக்கும் பெரிய வீட்டுப் பெண்ணான குஷ்புவுக்கும் இடையில் ஏற்படும் காதலும், அதற்கான போராட்டங்களுமே படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.
இப்போது மிகவும் க்ளிஷேவான படமாக தோன்றும் இந்த படம் 90 களில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் அதுவரையிலான தமிழ் சினிமா வரலாற்றில் எந்த படமும் செய்யாத சாதனையை இந்த படம் படைத்துள்ளது. சுமார் 46 திரையரங்குகளில் இந்த படம் 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளது. ஒரு படம் 100 நாட்கள் கடந்து ஓடுகிறது என்றால் ஏதேனும் சில தியேட்டர்களில் மட்டுமே ஓடும். சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் கூட அதிகபட்சம் 10 தியேட்டர்களில்தான் 100 நாட்களைக் கடந்து ஓடும். ஆனால் சின்னத்தம்பி திரைப்படம் இத்தனை தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது ஆச்சர்யமான ஒன்றுதான்.
