தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். 1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய படங்களின் தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரணுக்கும் தனக்கும் இடையிலான கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார்.
அதில் “ராஜ்கிரண் கொஞ்சம் கடனில் இருந்த போது அவருடைய நண்பர் என்னிடம் அழைத்து வந்து ஒரு படம் பண்ணித்தர சொன்னார். நானும் சரி என்றேன். அப்படி உருவானதுதான், ராசாவே உன்ன நம்பி படம். அந்த படம் வெளியாகி ஹிட்டானது. அடுத்து ‘ராஜ்கிரண் என்னிடம் ‘என்ன பெத்த ராசா’ என்ற டைட்டிலை சொல்லி நீங்கதான் நடிக்கவேண்டும் என்றார். நான் டைட்டிலுக்காகவே ஒத்துக் கொண்டேன். அந்த படமும் ஹிட்.
இதைத் தொடர்ந்து அவர் என்னை வைத்து ‘பெத்தவ மனசு’ என்ற படத்தைத் தொடங்கினார். அந்த படத்தில் அவர் பெயரே இயக்குனராக வரவேண்டும் என ஆசைப்பட்டார். நானும் சரி என்றேன். ஆனால் சில காரணங்களால் படம் பாதியிலேயே நின்றது. இதற்கிடையில் எனக்கும் சில தோல்விப் படங்கள் அமைந்தது. சில படங்கள் கைவிட்டுப் போனது. அதன் பிறகு பெத்தவ மனசு படத்தை கஸ்தூரி ராஜாவை இயக்குனர் ஆக்கி மீண்டுமெடுத்தார். படத்துக்கு இளையராஜா அண்ணனை இசையமைக்கக் கேட்டபோது மொத்த படத்தையும் எடுத்துட்டு வா என்றார். படத்தை எடுத்து முடித்தும் அதை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவில்லை. அதற்குக் காரணம் அந்த படம் வந்தால் நான் சினிமாவில் மீண்டும் பெரியாள் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் அவருக்கு இருந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
