சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட உடல் பாணியும் வசனம் உசசரிப்பும் இருக்கும். அதனை அடையாளமாக கொண்டு பலர் பிரபலமாகியுள்ளனர். ஆனால் தனது வித்யாசமான சிரிப்பையே தனது தனிப் பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான குமரிமுத்து.
பகுத்தறிவு வாதியான அவர் திராவிடர் கழகத்தில் பணியாற்றியுள்ளார். அதே போல திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் ஆகிய முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். குமரிமுத்துவுக்கு கொஞ்சம் மாறுகண். அதை வைத்தே அவரை பாடிஷேமிங் செய்யும் சில நகைச்சுவை காட்சிகளும் வந்துள்ளன என்பது தவிர்க்க முடியாத சோகமே.
நாகர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் தான் குமரிமுத்து. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். சினிமாத்துறையில் பலருக்கும் உதவி செய்த நல்ல மனதுக்காரர் என்ற பெயர் குமரிமுத்துவுக்கு உண்டு.

#image_title
இந்நிலையில் சமீபத்தில் இவரின் மனைவி புண்ணியவதியும் மகள்களில் ஒருவரும் அளித்த ஒரு நேர்காணலில் குமரிமுத்து பற்றி இதுவரை அறியாத பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதில் அவரின் மகள் தெரிவித்துள்ள தகவலின் படி “எங்கள் அப்பாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அவரிடம் அப்படி 60 டைரிக்கு மேல் இருந்தது. அவர் இறந்தபின்னர் ஒருநாள் அவர் டைரியைப் படித்துப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டோம்.
அதில் தான் வாங்கிய சம்பளத்தில் யார் யாருக்கெல்லாம் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன், என்ன காரணத்திற்காக செய்திருக்கிறேன் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார். அதே போல தான் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறேன் என்றும் எழுதி வைத்துள்ளார். இதைப் பார்த்து எங்கப்பா இத்தனைப் பேருக்கு உதவி செய்துள்ளாரா என ஆச்சர்யப்பட்டோம். ஆனால் எங்கப்பாவிடம் உதவி பெற்றவர்கள் யாருமே அவர் சாவுக்குக் கூட வரவில்லை.” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
