தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் விசு. இவர் இயக்கி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. நாடகத்துறையில் இருக்கும்போது விசு ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற நாடகத்துக்குக் கதை எழுதினார்.
அந்த நாடகம் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களால் இயக்கப்பட்டு விசு அவர்கள் நடித்து வெளியானது. இந்த நாடகத்தை திரைப்படம் ஆக்கும் உரிமையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாங்க, ஒய்.ஜி.மகேந்திரன் இதனை திரைப்படமாக இயக்கினார்.
ஜெமினி கணேசன் மற்றும் சௌகார் ஜானகி நடித்த இந்த படம் 1975ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இதே கதையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொஞ்சம் மாற்றி படமாக இயக்கி விசு சூப்பர் ஹிட்டாக்கினார் என்றால் நம்பமுடிகிறதா?
அந்த படம்தான் சம்சாரம் அது மின்சாரம். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.
1985 ஆம் ஆண்டு விசுவிடம் கதை கேட்ட அவர்களிடம் இந்த கதையை கூறியுள்ளார். அந்த கதை ஏவிஎம் நிறுவனத்திற்கு பிடித்து விட்டது. ஆனால் இந்த கதையை ஏற்கனவே ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கினார் என்றும் அந்த படம் படுதோல்வி அடைந்தது என்றும் விசு உண்மையை உடைத்து கூறினார். ஆனால் இந்த கதை கண்டிப்பாக ஓடும். நாம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கலாம் என நம்பிக்கை அளித்துள்ளனர்.
வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு செட் அமைக்கப்பட்டு, அதில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படி உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம் பெருவெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
