நடிகர் கஞ்சா கருப்பு இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கினார். அவரது இயற்பெயர் கருப்பு ராஜா என்றாலும் பிதாமகன் திரைப்படத்தில் கஞ்சா விற்பவராக நடித்ததால் அவர் கஞ்சா கருப்பு என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இதனை அடுத்து சுப்பிரமணியபுரம் படத்தில் கஞ்சா கருப்புவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜீவா, அருண் விஜய் உள்ளிட்டவருடன் இணைந்து பல்வேறு படங்களில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்த கஞ்சா கருப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். தான் சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் அந்த படத்திற்காக செலவு செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் சரியாக வரவேற்பை பெறவில்லை.

பருத்திவீரன் பட பிரச்சனையில் இயக்குனர் அமீருக்கும் சிவகுமாரின் குடும்பத்தினருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு பேசி உள்ளார். இந்த நிலையில் தன்னை சினிமாவில் ஆளாக்கிய பாலா மற்றும் அமீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு பாலா அமீர் இல்லம் என பெயர் வைத்துள்ளார்.

