தமிழ் திரையுலகில் 12 ஆண்டுகள் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து போராடி கதாநாயகன் ஆனவர் எம் ஜி ஆர். 1935 ஆம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்திலேயே ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தியாகராஜ பாகதவரின் சில படங்களில் குறிப்பிடத்தகுந்த வேடத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் அவர் கதாநாயகனாக நடித்த படம் ஒன்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ராசியில்லாத ஹீரோ என்ற முத்திரையும் அவர் மேல் விழுந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு ராஜகுமாரி படத்தின் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுவும் மீண்டும் ஹீரோவாக.
அதனால் இந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் அசத்திவிட வேண்டும் என நினைத்துள்ளார் எம்ஜிஆர். எல்லாக் காட்சிகள்லும் அர்ப்பணிப்போடு நடித்துள்ளார். அதிலும் ஒரு காட்சியில் தன் உயிரையே பணயமாக வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துளார்.
படத்தில் எம்ஜிஆரை சிறையில் அடைத்து இருப்பார்கள். எம்ஜிஆர் வாழ்க்கையே வெறுத்து ஒரு கட்டத்தில் அந்த அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலைக்கு முயற்சிக்கும் காட்சி. அவர் தூக்கில் தொங்கி உயிர்விட முயற்சி செய்கிறார். அவரது எடை தாங்காமல் உத்தரம் உடைந்து விழுவது போல உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டும் உத்தரம் விழ நேரமாகி விட்டது.
எம்ஜிஆரின் உடலோ அந்தரத்தில் தொங்குகிறது. குரல்வளை நெரிக்கப்பட, கழுத்து வலப்பக்கம் திரும்புகிறது. எடை கீழாக இழுக்கிறது. உத்திரம் இன்னும் சில வினாடிகள் விழாமல் இப்படியே நீடித்தால் எம் ஜி ஆர் உயிரே போய்விடும் ஆபத்து. ஒரு வழியாக உத்தரம் உடைய எம் ஜி ஆர் கீழே விழுகிறார். இப்படி தன் முதல் படத்திலேயே ரிஸ்க் எடுத்த எம் ஜி ஆர், தன்னுடைய கடைசி படம் வரை சண்டைக் காட்சிகளில் அதீத கவனம் எடுத்துக்கொண்டார்.
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கினார் எம் ஜி ஆர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர்.
