பிரபல நடிகையின் வருகையால் பாதி சாப்பாட்டில் எழுப்பி விடப்பட்ட விஜயகாந்த்.. பசி என்று வருவோருக்கு கேப்டன் உதவுவது இதனால்தானா..?

By admin on மார்கழி 30, 2023

Spread the love

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் சாதனை படைத்தவர். 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற கட்சியை துவங்கி, அவரது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.11 சதவீத ஓட்டுகளை பெற்றார். இது அதிமுக, திமுக அதன் கூட்டணி கட்சிகள் களத்தில் இருந்தும், ஒரு நடிகராக மட்டுமே அரசியல் களத்தில் இறங்கி அதிக ஓட்டு சதவீதத்தை பெற்று தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து, 2011ம் ஆண்டில் அதிக தொகுதிகளில் வென்று தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். இதற்கு ஒரே காரணம், ஒரு நடிகராக, சிறந்த மனிதராக, அவர் நடந்துக்கொண்ட விதம்தான். அதிலும் பசி என்று வந்தவர்களுக்கு எந்நேரமும் உணவு பரிமாறிய அவரது கருணை குணம்தான்.

   

நடிக்க வந்த புதிதில், அறிமுக நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் நடக்கும் அத்தனை அவமானங்களும் விஜயகாந்துக்கு நடந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, அப்புறம் எதுக்குப்பா ஒரு விஜயகாந்த் என அவரிடமே நேரடியாக கேட்டு கிண்டலடித்திருக்கின்றனர். விஜயகாந்த் கருப்பாக இருந்ததால், பல முன்னணி நடிகைகள் இவருடன் நடிக்க சம்மதிக்கவில்லை. இன்னும் சில நடிகைகள் பாதி படத்தில் விலகிக்கொண்டனர். இவர் வாய்ப்புக் கேட்டுச் சென்ற போது சில தயாரிப்பாளர்கள் அவரை புறக்கணித்தனர். சில இயக்குநர்கள் அவருக்கு நடிக்க வாய்ப்பு தர முடியாது என்றும் கூறிவிட்டனர்.

   

 

இப்படி பல அவமானங்களை, ஏமாற்றங்களை, துரோகங்களை வாழ்க்கையில் சந்தித்து பின் முன்னுக்கு வந்தவர்தான் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். ஒருமுறை அவர் அகல்விளக்கு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது விஜயகாந்த் அறிமுக நடிகர்தான். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார், பெரிய அளவில் புகழ்பெறவில்லை. அப்போது அகல்விளக்கு படப்பிடிப்பில் அன்று நடிக்க வேண்டிய ஷோபா வரவில்லை. இதனால் விஜயகாந்த் சென்று சாப்பிட அமர்ந்துவிட்டார். சாப்பாடு பரிமாறிய நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நடிகை ஷோபா வந்துவிட்டார். உடனே அவருடன் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என, சாப்பிட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை பாதி சாப்பாட்டிலேயே விட்டுவிட்டு எழுந்து வரச் செய்துள்ளனர். அப்படி பாதி சாப்பாட்டில் தன்னை எழுந்துவிட செய்ததால், பசியோடு யார் வந்தாலும் பசி தீர்க்கும் ஒரு குணத்தை வந்துவிட்டதாக ஒரு ரே்காணலில் விஜயகாந்தே கூறியிருக்கிறார்.