நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக 97 வயது மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். போட் கோஷி-திரிசூரி வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் வீடுகள், பள்ளிகள் மற்றும் சாலைகளை அடியோடு அடித்துச் சென்றது. எங்கு நோக்கினும் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு வந்த சூழலில், இடிபாடுகளுக்கு இடையே இருந்து இந்த மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் மீட்புப் படையினரையும் உலக மக்களையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் சுமார் 8,900 ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் நுவாகோட் மாவட்டம், கபிலாஷ் பகுதியில் அமைந்திருந்த முதியோர் இல்லத்தில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு வசித்து வந்த குணா மாயா போரா என்ற 97 வயது மூதாட்டி சேறும் சகதியும் நிறைந்த இடிபாடுகளில் சிக்கியிருப்பது தெரியவந்தது. முதியோர் இல்லத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலும், வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அப்பகுதியை அடைந்து தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 8 முதல் 9 மணி நேரமாக இடிபாடுகளுக்கு நடுவே தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாட்டியின் சிறிய தலை அசைவை வைத்தே மீட்புப் படையினர் அவரைக் கண்டுபிடித்தனர். அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவியதால், கனரக பொக்லைன் இயந்திரத்தின் (Earthmover) பக்கெட்டில் பாட்டியைப் பத்திரமாக அமர்த்தி மீட்டெடுத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள பீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும், அவர் நலமாக இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அற்புத மீட்புச் சம்பவத்துடன், சப்யா முனகாமி மற்றும் காவ்யா முனகாமி என்ற இரண்டு வயதுடைய இரு பெண் குழந்தைகளும் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலங்களும் சடலங்களும் நிறைந்திருந்த வேளையில், 97 வயது மூதாட்டியும் பிஞ்சுக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டது பேரழிவிற்கு மத்தியிலும் மீட்புக் குழுவினருக்குப் புதிய நம்பிக்கையையும் அளப்பரிய மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
