தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மயூர் விஹார் குதியில் இயங்கி வரும் லவ்லி ஹெரிட்டேஜ் பள்ளியில் நேற்று காலை உடற்கல்வி வகுப்பை முடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பிய 9 வயது சிறுமி, ஆசிரியை முன்னிலையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென இடுப்பில் கை வைத்து முகங்குப்புறக் கீழே விழுந்துள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகள் வகுப்பறை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
சிறுமியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் பாண்டவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிர்மான் விஹாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது மகளுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், அவசரக் காலத்தில் உடனடியாக முதலுதவி வழங்கியிருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும், அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் தாமதித்ததாகவும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
