திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 87 பக்தர்கள் மயக்கமடைந்ததாக சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியான செய்தி முற்றிலும் உண்மையல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகக் கூறப்படும் தகவல் தவறானது என்றும், உண்மையில் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ஒரே ஒரு பக்தர் மட்டுமே லேசான மயக்கமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோடைக்கால வெப்பத்தைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் குடிநீர் வசதி, பந்தல் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறநிலையத்துறை சிறப்பான முறையில் எடுத்துள்ளதாக அந்த விளக்கத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
