மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட கேட்ட 7 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்சார் மாவட்டத்தில் உள்ள தனசர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பல்லவி கும்தே (40) என்பவருக்கு பத்து வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் தனக்கு சிக்கன் சமைத்து தருமாறு தாயிடம் கேட்டுள்ளான்.
சிறுவன் தொடர்ந்து கோழி சமைத்து தர வேண்டுமென தாயிடம் கேட்டதால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பல்லவி தனது மகனையும் மகளையும் பூரிக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அப்படியே விட்டுவிட்டார். இதனால் 7 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஓடிவந்து பார்த்துள்ளார்.
அப்போது மகனின் உடலை துணியால் மூடி பல்லவி வைத்துள்ளார். இது குறித்து கேட்டபோது மஞ்சள் காமாலை நோயால் தனது மகன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் உடனே போலீசில் தகவல் தெரிவித்தார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பல்லவி இடம் விசாரணை நடத்திய போது தனது மகனை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் படுகாயம் அடைந்த பத்து வயது மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
