கழுத்தில் கயிறு தழும்பு… வாயில் ரத்தம்…. விளையாடச் சென்ற சிறுவனுக்கு என்ன ஆச்சு?…. மதுரையில் உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தில், 3-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் முத்துவேலன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியகருப்பன் துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில், தாய் சத்யா மற்றும் இரு பிள்ளைகளுடன் தனியாமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்ற முத்துவேலன், மதிய உணவிற்குப் பிறகும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். சிறுவன் கிடைக்காததால் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஊர் மக்களின் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவிலும் சிறுவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி, சிறுவனைக் கண்டுபிடிக்கத் தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். அதன்பின்னர், திங்கள்கிழமை காலை முதல் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகத் தேடும் பணி முடுக்கடப்பட்டது.

   

அவ்வாறு தேடப்பட்ட நிலையில், சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துவேலன் குப்புறப் படுத்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் எவ்வாறு அந்தப் பாழடைந்த வீட்டிற்குச் சென்றான் மற்றும் அவனது இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இச்சம்பவம் குறித்துப் பேசிய சிறுவனின் உறவினர்கள், முத்துவேலனின் கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம் மற்றும் கண்ணின் கீழ் காயம் இருப்பதால் அவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். புகார் அளித்த உடனேயே காவல்துறை தீவிரமாகத் தேடியிருந்தால் சிறுவனை உயிருடன் மீட்டிருக்கலாம் என்றும், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரையிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் தாயாருக்கு அரசு வேலை வழங்கும் வரையிலும் உடலைப் பெறப்போவதில்லை என்றும் உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.