சென்னை கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை பகுதியைச் சேர்ந்த அரிஷ்குமார் (65) என்ற முதியவர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை கடந்த சில மாதங்களாகப் பின்தொடர்ந்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அந்த இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த போதிலும், முதியவர் தனது செயலை நிறுத்தாமல் அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இது குறித்து அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முதியவர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, அவர் கத்தியைக் காட்டி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி நாடகமாடியுள்ளார். அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், முதியவரின் தொல்லை குறையவில்லை. மாறாக, அவர் அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணிற்குத் தொடர்ந்து காதல் கவிதைகளை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளான அந்த இளம்பெண், இது குறித்து தனது உறவினரான 27 வயது வாலிபரிடம் தெரிவித்துள்ளார். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட தொடர் அநீதியால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நேற்று முதியவர் அரிஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அயனாவரம் போலீசார், உடனடியாகக் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணுக்கு முதியவர் தொடர்ந்து தொல்லை கொடுத்த ஆத்திரத்திலேயே அந்த வாலிபர் இந்தத் தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 27 வயது வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டும், முதியவர் திருந்தாமல் தொடர்ந்து இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
