அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ், தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை ரத்து செய்து, வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது. இந்த விதியை கடைப்பிடிக்க மறுத்தால், பணி நீக்கத் தொகையைப் பெற்றுக்கொண்டு வேலையை விட்டு நிற்கலாம் என்று நிறுவனம் தெரிவித்தது.
இதனால் கோபமடைந்த சுமார் 600 ஊழியர்கள், ராஜினாமா செய்து அந்தத் தொகையைப் பெறத் தயாராகியுள்ளனர், இது நிறுவனத்திற்கு 185 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் கொண்ட இந்நிறுவனம், திரைப்படங்கள், இசை, டிவி நிகழ்ச்சிகள், வெப் தளங்கள் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படுகிறது. இது ஒரு பன்னாட்டு ஊடக மற்றும் பொழுதுபோக்கு சக்தியாக அறியப்படுகிறது.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியாக டேவிட் எல்லிசன் பணியாற்றுகிறார். அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் இந்நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்கைடான்ஸ் மற்றும் பாரமவுண்ட் நிறுவனங்கள் இணைந்து 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடித்தன. இதன் பிறகே இந்த மாற்றங்கள் தொடங்கின.
