உத்தரபிரதேச மாநிலம் அலிகார்-காஸ்கஞ்ச் எல்லையில் அமைந்துள்ள மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வந்த 6 வயது சிறுமி அனன்யா, பள்ளிப் பேருந்தின் தரைப்பகுதி திடீரென உடைந்ததால் கீழே விழுந்து அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுகேஜி படித்து வந்த அனன்யா, தனது அண்ணன் கோலுவுடன் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
மேலும் பேருந்தின் தரைத்தளம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அனன்யா கீழே விழுவதைக் கண்டு அவளது அண்ணன் அலறியடித்தும், பேருந்தை நிறுத்துவதற்குள் சிறுமி சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
இந்த விபத்தினால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும் கிராம மக்களும் அலிகார்-காஸ்கஞ்ச் சாலையில் மறியலில் ஈடுபட்டு கடும் போராட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே ஒரு பிஞ்சு உயிர் போவதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தந்தை ரவி அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய மற்றும் தரமற்ற பேருந்துகளை இயக்குவது மாணவர்களின் உயிருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
