மகாராஷ்டிரா மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நடு இரவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மளிகைக் கடை மற்றும் வீடு எரிந்து சாம்பலானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகியும் மூச்சுத்திணறியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாராசிவ் மாவட்டம் ஏட்ஷி கிராமத்தில், 3 தலைமுறைகளாகச் செயல்பட்டு வந்த மளிகைக் கடை மற்றும் அதனுடன் இணைந்த வீடு உள்ளது. தீபாவளி பண்டிகை நடு இரவில் இந்த வீடடை திடீரென பயங்கரத் தீ சூழ்ந்துகொண்டது. இதில் கடை மற்றும் வீடு முழுவதுமாகக் கணநேரத்தில் எரிந்து சாம்பலானது.
இந்தத் தீ விபத்தில், புனே மற்றும் தாராசிவில் படித்து வந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த சித்தாய் மற்றும் காயத்ரி ஆகிய 2 மகள்கள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்தும் தீயணைப்பு வாகனம் உரிய நேரத்திற்கு வரவில்லை என்றும், வந்த வாகனத்தில் தண்ணீரும் இல்லை என்றும் கூறி உள்ளூர் மக்கள் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டனர். வீட்டின் சுவரை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து மக்களைக் காப்பாற்ற முயன்றும் அதற்குள் 6 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
