2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 70 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியபோது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவிடம் 70 இடங்களைக் கொடுத்துவிட்டால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு ஆகியவை கேள்விக்குறியாகும் என்பதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக, ‘பாஜகவே மற்ற சிறு கட்சிகளுக்கான இடங்களையும் பிரித்துக் கொடுக்கும்’ என்ற நிபந்தனையை இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
பதிலுக்கு அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சி கூடுதல் இடங்களைக் கேட்கிறது. ஆனால், அதிமுகவின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் இத்தனை இடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
இந்தத் தொகுதிப் பங்கீடு மோதல் காரணமாக அதிமுக கூட்டணியில் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவுகிறது. திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையிலான இந்த இழுபறி கூட்டணியின் வலிமையைப் பாதிக்குமா அல்லது சுமூகமான முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
