மும்பையின் மீரா ரோடு பகுதியில் உள்ள வாடகைக் குடியிருப்பில், 56 வயதான மனோஜ் சானே என்பவரால் அவருடன் 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 32 வயதான காதலி சரஸ்வதி வைத்யா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனோஜ் சானேயின் வீட்டிலிருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர் அவரது கதவைத் தட்டியுள்ளார். அப்போது மனோஜ் ரூம் ஃப்ரெஷ்னரைத் தெளித்துவிட்டு, ஒரு கருப்பு சாக்குடன் வெளியே வந்து இரவில் திரும்புவதாகக் கூறிச் சென்றுள்ளார். இதனால் மேலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நயா நகர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சரஸ்வதியின் அழுகிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
போலீசார் நடத்திய சோதனையில், மனோஜ் சானே தனது காதலியின் உடலை மரம் வெட்டும் கத்தியால் 20 துண்டுகளாக வெட்டிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. சமையலறையில் மூன்று வாளிகளில் இரத்தமும் சதையும், பிரஷர் குக்கரில் வேகவைக்கப்பட்ட உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், படுக்கையறையில் பாதிக்கப்பட்டவரின் தலைமுடியும், உடல் பாகங்களை அப்புறப்படுத்தப் பயன்படுத்திய கருப்பு பிளாஸ்டிக் பைகளும், துர்நாற்றத்தை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட பல ஏர் ஃப்ரெஷ்னர் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மனோஜ் உடலின் சில பாகங்களை ரயில் தண்டவாளம் அருகிலுள்ள வடிகாலில் வீசியிருக்கலாம் என்றும், சில பாகங்களைத் தெரு நாய்களுக்கு உணவாகக் கொடுத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு போரிவலி பகுதியில் உள்ள மனோஜ் சானேவின் ரேஷன் கடையில் சரஸ்வதியை முதன்முதலில் சந்தித்து இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். 2017-ல் மீரா ரோடு பகுதிக்குக் குடிபெயர்ந்த இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நடந்துள்ளதாகத் துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பாலே தெரிவித்துள்ளார். ஆனால், சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டதால் தான் உடலை அப்புறப்படுத்தியதாக மனோஜ் போலீசாரிடம் கூறியுள்ளார். தற்போது உடல் பாகங்களின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதன்கிழமை கைது செய்யப்பட்ட மனோஜ் சானே, தானே நீதிமன்றத்தால் ஜூன் 16 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
