சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, கடந்த மாதத்தில் 1,290 ஆக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பதிவாகும் டெங்கு வழக்குகளில் 90% முதல் 95% வரை சாதாரண காய்ச்சலாகவே இருப்பதால், மருத்துவர் ஆலோசனையுடன் வீடுகளிலேயே ஓய்வெடுத்து குணமடைந்து விடுகின்றனர். மீதமுள்ள 5% முதல் 10% நோயாளிகளுக்கே தீவிர கண்காணிப்புடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. சளி, இருமல் இன்றி கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால் அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 3,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூவம், அடையாறு போன்ற பெரிய நீர்நிலைகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நவீன ட்ரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள் மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் இளநீர் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
