தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்டாலும், சமீபத்திய அரசியல் மாற்றங்கள் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று அக்கட்சியின் கௌரவத்தைக் காத்த வைத்திலிங்கம், தற்போது திமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுகவில் இணைந்தது அக்கட்சித் தலைமைக்கு பலமாகத் தோன்றினாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தத் தொகுதியில் கடுமையாக உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.
ஒரத்தநாடு தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் மக்கள் பணியாற்றிய துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா மற்றும் மகேஷ் கிருஷ்ணசாமி போன்ற நிர்வாகிகள் தற்போது மிகுந்த மனவேதனையில் உள்ளனர். தங்கள் உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், மாற்றுக்கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், “ஐந்தாண்டு கால உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே” என அவர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் தொகுதியில் ஒருவிதத் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்ற ஒரு போட்டி தஞ்சாவூர் தொகுதியிலும் நிலவுகிறது. அங்கு ஒரு இடத்திற்குப் பத்து பேர் வரை போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. மேயர் சண். ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த உதயநிதி ஆகியோர் வேட்பாளர் வாய்ப்பைப் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர். இதில் நீலமேகம் தனது பதவியைத் தக்கவைக்க அறிவாலயத்திற்குத் தொடர்ந்து படையெடுத்து வரும் நிலையில், சண். ராமநாதன் மற்றும் இளைஞரணி உதயநிதி ஆகியோரும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கப் போராடி வருகின்றனர்.
பொதுவாக ஒரு தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவும். ஆனால், டெல்டா மாவட்டங்களில் தற்போது திமுகவினருக்குள்ளேயே கடுமையான போட்டி நிலவுவது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் வெற்றி உறுதி என்ற சூழல் இருப்பதால், சீட் வாங்குவதற்கு நிலவும் இந்த முரண்பாடுகள் வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
