உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 5 வயதுச் சிறுவன், கழிவறை செல்ல அனுமதி கேட்டபோது ஆசிரியை மறுத்ததால் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ஆசிரியை, அக்குழந்தையை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கி குழந்தையின் அந்தரங்க உறுப்பில் சுட்டுக் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அக்குழந்தையை மிரட்டியுள்ளார்.
வீட்டிற்கு வந்த குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைக் கண்ணீருடன் கூறியதையடுத்து, பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், பள்ளி முதல்வரும் மேலாளரும் அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கறிஞரான குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
