டெல்லி கால்காஜி எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ‘ஆஷா கிரண்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சோகமான சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமியின் தந்தை மிதுன் தாஸ் அப்பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த விபத்து நடந்த சமயத்தில் சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, சிறுமி வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே தூங்கியுள்ளார். இரவு 10:30 மணியளவில் திடீரென தூக்கத்திலிருந்து விழித்த சிறுமி, வீட்டில் தனது தாயைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு பால்கனி பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பால்கனி ரெயிலிங் வழியாக கீழே குனிந்து பார்க்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி 10-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த சிறுமியை உடனே மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தென்கிழக்கு டெல்லி போலீசார், குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பால்கனியில் போதிய பாதுகாப்பு கிரில் வசதிகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், பாதுகாப்பு கிரில் இருந்திருந்தால் தங்கள் குழந்தை உயிர் பிழைத்திருக்கும் என்றும் சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
