தமிழக அரசியல் களம் தேர்தல் வாக்குறுதிகளால் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருவதோடு, சமீபத்தில் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்கியிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்குப் போட்டியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சியின் இந்த மெகா அறிவிப்பு, ஆளும் தரப்பை தனது அடுத்தகட்ட வியூகங்களை நோக்கி நகர வைத்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைக்கப்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு இதில் முக்கிய இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கைக் குழு தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. நிதிநிலை மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, வாக்காளர்களைக் கவரும் வகையிலான இந்த அறிவிப்பை இறுதி செய்யும் பணிகளில் அக்கட்சி மும்முரம் காட்டி வருகிறது.
